-

பார்க்கலாம் நின்றபடி பார்க்கலாம்உட் கார்ந்தபடி பார்க்கலாம்ஷோ பாவில் படுத்தபடி -பாக்கலாந்தான் இம்மாம் பெரிய உலகத்தைக் கண்முன்னே தம்மாத்துண் டேகணினி யில்!

வெள்ளி, 30 மே, 2008

சீச்சீ!

ஸ்பேட்க்குஸ்பேட் டும்டைமன்க்கு டைமனும் ஆட்டினுக்கு
ஆட்டி(ன்)கிளா வர்க்குக் கிளாவரும் -மேட்சாகும்
சீட்டுவிளை யாட்டிலும் சிக்கல்தான் தேர்தலில்
சீட்டுக்குஞ் சிக்கல்தான் சீ!

அக்காள்ன்னும் தங்கைன்னும் ஆத்தாள்ன்னும் வெண்திரையில்
பக்காவா நீள்வசனம் பேசிடுவான்! -மக்யாநாள்
ராவில் அவளோட ரௌண்டுகட்டிக் கூத்தடிப்பான்
தாவில் நடிகனுங்க தான்!

அகரம்.அமுதா

செவ்வாய், 27 மே, 2008

உலறல்!

ஹாக்கிக்குக் கேர்ள்ஃபிரண்டு கோல்ஃபாகும்; சீட்டுக்குள்
ஜோக்கருக் கத்தனையும் ஜோடியே! -ஷோக்கா
இருந்த படியாடும் ஆடுபுலி செஸ்க்கு;
கிரிக்கெட்க்குக் கேர்ள்ஃபிரண்டு கில்லி!

இத்தாம் பெரிய உலகமிது! உங்கணினிப்
பொத்தானுக் குள்ளே அடங்கிடுச்சே! -அத்தானே!
அம்மிக்குள் சிக்கும் அரைமூலித் தேங்காப்போல்
கம்ப்யூட்ட ருள்ளுலகம் காண்!

அகரம்.அமுதா

வியாழன், 22 மே, 2008

முனைந்தால் முடியாத தில்!

நேர்முன் நிரை;நிரைமுன் நேர்;காய்முன் நேர்;ஈற்றில்
நேர்நிரை காசுபி றப்பிலொன்றைச் -சேர்த்துப்
புனைந்தால் ஒருவெண்பா பூத்துவரும் நண்பா!
முனைந்தால் முடியாத தில்!

எதுகைமோ னைதேடி ஏனலை கின்றாய்?
பொதுவாய்த் தளைகொண்டால் போதும்; -மதுவாய்ப்
புதுப்புது செம்பொருளைத் தேடிப் புகுத்தேன்!
அதுவன்றோ பண்ணுக் கழகு!

சான்றோர்க்கும் வெண்பாத் தளைசறுக்கும் என்பதனால்
தேன்போன்ற செம்பொருள் சிந்தைக்குள் -தோன்றின்
கிறுக்கி விடுவாய்; கிறுக்கியதைப் பின்னே
பொறுக்கித் தொடுப்பாய் பொறுத்து!

அகரம்.அமுதா

திங்கள், 19 மே, 2008

கல்லூரிப் பெண்!


1.
அங்கமெல்லாம் ஆடை அணிந்தும் மறைத்திடுவாள்
கொங்கைகளைப் பாடநூல் கொண்டு!
2.
கொங்கு தமிழிருந்தும் இங்கிலிஷை வைத்திடுவாள்
நுங்குநிகர் நாக்கின் நுனி!
3.
எண்ணையிடாள்; கூந்தல் முடிந்திடாள்; பூச்சூடாள்;
வண்ணவண்ண ஹேர்டையிடு வாள்!
4.
கைவிரல் மோதிரத்தைத் தொப்பூழ் தனிலணிந்துக்
கைவளையைக் காதணிவாள் காண்!
5.
மெய்க்குயிர்போல் ஒன்றி விடுங்காத லானாலும்
கைக்குதென்பாள் காசில்லாக் கால்!
6.
பிக்கப்பும் ஆவதொடு டேட்டிங்கும் போய்வந்து
செக்கப்பும் செய்வாள் சிலை!
7.
டிஸ்கோதே டின்பீர் இலாநாக ரீகத்தை
பிஸ்கோத்தே போல்பார்ப்பாள் பெண்!

அகரம்.அமுதா

வியாழன், 15 மே, 2008

பாட்டைக் குறைப்பதற்குப் பார்!

வயதான தந்தை!
உஞ்சோட்டுப் பிள்ளைகள் ஓடியாடி வேலைசெஞ்சி
கொஞ்சநஞ்சம் காசுசேர்த்துக் கொண்டுவர -நஞ்சபுஞ்ச
வித்து வெளிநாடு போரப்போ நீமட்டும்
எத்தனைநாள் ஊர்சுத்து வே?

வீட்டைவைத் தேனும் விதைநெல்லை வித்தேனும்
காட்டைவைத் தேனும் கடஞ்சொல்லி -ஏட்டில்கை
நாட்டைவைத் தேனும் வெளிநாடு போயென்றன்
பாட்டைக் குறைப்பதற்குப் பார்!

விளக்கம்:-
வீட்டை வைத்தேனும் என்பது வீட்டை அடகு வைத்தேனும் என்பதாகும். இதில் அடகு எனுஞ்சொல் தொகை நிலையில் உள்ளது. காட்டை வைத்தேனும் என்பதையும் அப்படியே கொள்ளுதல் வேண்டும்.

அகரம்.அமுதா

செவ்வாய், 13 மே, 2008

உங்களைத்தான் கேட்கிறேன்!

அஞ்சி வருஷம் அரசாள வேண்டியே
அஞ்சோபத் தோலஞ்சம் தந்தீர்!அதை -மிஞ்ச
ஒருடி.வி தந்தீர்! இரும்!கொடுத்த வாக்கை
நிறைவேற்றித் தந்தீரா நீர்?

புட்டிக்கு ‘பார்’திறந் தோங்கு புகழ்பெற்றீர்!
குட்டிக்கு லாட்ஜ்திறக்கக் கூடாதா? -சட்டம்
மதுவிலக்கை ரத்துசெயத் தானா? இதற்கும்
புதுவிதியைக் கண்டு புகுத்து!

அகரம்.அமுதா

புதன், 7 மே, 2008

விந்தை!

பார்க்கலாம் நிண்ணபடி; பார்க்கலாம்உட் கார்ந்தபடி;
பார்க்கலாம்ஷோ பாவில் படுத்தபடி; -பார்க்கலாந்தான்
இம்மாம் பெரிய உலகத்தைக் கண்முன்னே
தம்மாதுண் டேகணினி யில்!

அகரம்.அமுதா

இப்படியும், அப்படியும்!

பஞ்சணை யில்சிலர்; பாயில் சிலர்;பாவை
நெஞ்சணை யில்சிலர் நிம்மதியாய்த் -துஞ்சுவார்!இந்
நாட்டில் சிலரோ எனில்தூங் கிடுவாரே
ப்ளாட்பாரந் தன்னில் படுத்து!

மெக்டோனல்; கே.எஃ.சி; பிஸ்ஸாஹட் சென்றுநிதம்
வக்கணையாய்த் தின்னும் வசதியெல்லாம் -மிக்கிருந்தும்
ஏழைக்கொன் றீயா இரும்பு மனக்கூட்டம்;
கூழுக் கலையுமோர்கூட் டம்!

அகரம்.அமுதா

திங்கள், 5 மே, 2008

இன்றைய தலைமுறை!

ஆபியம், கிட்டிப்புல், பம்பரம் போயாச்சு;
ஹாபியாய் வீடியோ கேமாச்சு; -ஹேப்பியாய்க்
குந்தி விளையாடும் கேம்ஸின் அடிமைகளாய்
சந்ததிகள் ஆயிடுச்சே தான்!

மூக்கில் சலியொழுகும்; முன்பல் இரண்டிரா;
காக்கி டவுசரைக் கையினால் -தூக்கிப்
பிடித்தபடி, பேட்டுயரம் இல்லாப் பொடிசும்
அடிக்குமே சிக்சரை ஆர்த்து!

அகரம்.அமுதா

வியாழன், 1 மே, 2008

தாயும், மகனும்!

மகன்:-
வீடியோ கேமரா வாய்ஸ்ரெக்கார்(டு) எம்.பி.த்ரி
ரேடியோ இல்லாமல் செல்போனா? -டாடியோட
பேங்க்பேலன்ஸ் தீர்ந்தாலும் தீரட்டும் காஸ்ட்லிசெல்
வாங்கினால்தான் ஃபிரண்ட்ஸ்முன் மதிப்பு!

அன்னை:-
வேர்வைசிந்தி அப்பன் வயல்காட்டில் வேலைசெய்து
கார்ப்பரேஷன் ஸ்கூலிலுன்னைக் கொண்டுபோய் -சேர்க்காமல்
கான்மெண்டில் சேர்த்துவிட்டுக் காலேஜ்க்கும் போச்சொன்னால்
ஏன்டா கொழுப்பா உனக்கு?

அகரம்.அமுதா